Saturday, December 18, 2010

திரையரங்குகளில் தொடரும் கட்டணக் கொள்ளை..!!





திருச்சி, டிச. 15: திருச்சியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் அண்மைக்காலமாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மூடப்பட்டு வரும் திரையரங்குகளின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து படம் பார்ப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. தற்போது, பெரும்பாலான திரையரங்குகளில் "அரங்கம் நிறைந்தது' என்ற அறிவிப்பை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

திரையரங்குகளுக்கு மக்களின் வரத்து குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே காரணம் என்று பெரும்பாலானோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது ஒரு வகையில் உண்மையும்கூட. ஒரு திரைப்படம் வெளியான சில நாள்கள் வரை குறைந்தது ரூ. 70 முதல் ரூ. 100 வரை கட்டணம் வசூலிப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ப திரையரங்குகளில் போதிய வசதிகள் இருக்கின்றனவா? என்றால், இல்லை என்பது மட்டுமே பதில். எந்தத் திரையரங்கிலும் சுகாதார வசதிகள் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, திரையரங்குக்கு படம் பார்க்கச் செல்பவர்களில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சில திரையரங்குகளில் அதிர்ச்சியளிக்கும் வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்தாண்டு தொடக்கத்தில் இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5, ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்கு இந்தக் கட்டணம் அதிகமே என்றாலும், வேறு வழியின்றி கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்த நிலையில், இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 7, ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 15 என்று ஓசையின்றி கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்தக் கட்டண உயர்வு தற்போது இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 10, ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 என்ற வகையில் வசூலிக்கப்படுவது திரையரங்குளுக்கு வரும் குறைந்த அளவிலான மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன கட்டண நிறுத்துமிடத்தில் நாளொன்றுக்கு ரூ. 5, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள நிறுத்துமிடத்தில் நாளொன்றுக்கு ரூ. 4 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டண உயர்வுகளுக்கு மத்தியில் குடும்பத்தோடு திரையரங்குக்கு சென்று படம் பார்க்க முடியுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், குளிர்பானங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யாதது, குடிநீர் வசதி செய்து கொடுக்காதது என திரையரங்குகள் மீது புகார்கள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.

திருட்டு விசிடி வருகையால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பது ஓரளவு உண்மையாக இருந்தாலும், திரையரங்குகளுக்குச் சென்றால் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு ஆகும் செலவை ஒரே நாளில் செலுத்த யாராவது முன்வருவார்களா? என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். திருச்சி மாநகரைப் பொருத்தவரை ரூ. 20 முதல் ரூ. 30 வரை என்ற விலைக்கு புதுப்பட விசிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.நான்கு பேர் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தினர் காரில் வந்தால் அவர்கள் காருக்கு கொடுக்கும் காப்பகக் கட்டணத்தில் (ரூ. 20) ஒரு விசிடியை வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்தபடி படம் பார்ப்பார்களா? அல்லது திரையரங்குக்கு வருவார்களா? என்பதை அதிகக் கட்டணம் (வாகனத்துக்கும்) வசூலிக்கும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் யோசிக்க வேண்டும்.

திரையரங்குகளில் மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஆய்வும் நடந்ததாகத் தெரியவில்லை; எந்தத் திரையரங்கு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.